கடலூர்: அரசு உயர்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்தினை மாணவர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து மாணவர்கள் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி திருகண்டேஸ்வரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில்
பள்ளி மேம்பாட்டு மானிய நிதி திட்டத்தின் கீழ் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ரூ.130.00 இலட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டிடங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்காக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலையில் துவக்கி வைத்தார். அப்போது தெரிவித்த அவர்,
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிய பள்ளிக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தினை தூய்மையாகவும், குடிநீர் மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் ராஜ்குமார் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.