
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் வரும், நவம்பர் 28 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடக்கிறது. உலகின் தலைசிறந்த, 24 அணிகள் பங்கேற்கும், இந்த போட்டிகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன. உலக கோப்பை ஹாக்கி போட்டி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உலக கோப்பை வலம் வருகிறது. இதனை, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் துவக்கி வைத்த நிலையில், கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு உலக கோப்பை கொண்டு வரப்பட்டது. அப்போது பேண்ட் வாத்தியங்கள் முழங்க, மலர் தூவி வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும் உலக கோப்பை மற்றும் இந்த போட்டிக்கான (இலச்சினை) ‘லோகோ’ வான காங்கேயன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, ஜி.ஆர்.கே குழும தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள், வீரர்கள் பங்கேற்ற நிலையில் ஆட்சியர் மற்றும் அமைச்சர் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தனர்.